Sunday, 10 May 2015

பருப்பு பிரதமன்

பருப்பு பிரதமன் 

 
 
என்னென்ன தேவை? 

பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு - தலா 100 கிராம் 

வெல்லப் பாகு - 300 கிராம் 

நெய் - 1 டேபிள் ஸ்பூன் 

நறுக்கிய தேங்காய் அல்லது உலர்ந்த கொப்பரை - 1 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன் 


எப்படிச் செய்வது? 

 
பருப்பு வகைகளை குக்கரில் குழைய வேகவைத்து மசிக்கவும். வெல்லத்தைச் சிறிதளவு நீரில் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். வாணலியில் நெய்யைச் சூடாக்கி, பல்லாக நறுக்கிய தேங்காயைச் சிவக்க வறுக்கவும். அதில் வெல்லப்பாகு, வேகவைத்த பருப்பு வகைகள் சேர்க்கவும். நன்கு கொதித்து வரும்போது ஏலப் பொடி தூவி இறக்கவும். கெட்டியாக இருந்தால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் பரிமாறும் முன் சிறிது தேங்காய்ப் பால் சேர்க்கலாம். தேங்காய்ப் பால் சேர்த்துவிட்டால் விரைவில் புளித்துவிடும் என்பதால், நீண்டநேரம் வைத்துப் பயன்படுத்த முடியாது.

சித்திரை விருந்து - புளி இஞ்சி

தினசரி சமையலையே ஒரு கை பார்த்துவிடும் நம் இல்லத்தரசிகளுக்குப் பண்டிகை வந்துவிட்டால் கேட்கவா வேண்டும்? தமிழர்களின் சித்திரைத் திருநாளும் அதைத் தொடர்ந்து கேரள மக்களின் விஷு வருடப் பிறப்பும் வருகிற நாட்களில், சமையலறையும் புதுக்கோலம் பூண்டுவிடும். தமிழகத்தின் பக்குவமும் கேரளத்தின் கைமணமும் நிறைந்த சில உணவு வகைகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சென்னை டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்த லட்சுமி சீனிவாசன். புத்தாண்டைப் புதுச் சுவையோடு சிறப்பிக்கலாம் வாருங்கள் தோழிகளே. 



புளி இஞ்சி 


 
என்னென்ன தேவை? 
 
இஞ்சி - 100 கிராம் 

பச்சை மிளகாய் - 4 

வெல்லம், பெருங்காயம் - சிறிதளவு 

மஞ்சள் பொடி - 1 சிட்டிகை 

புளி - 50 கிராம் 

நல்லெண்ணெய் - 50 கிராம் 

கடுகு - அரை டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 


எப்படிச் செய்வது? 

 
நார் இல்லாத இஞ்சியாகப் பார்த்து வாங்கவும். அதைத் தோல் நீக்கி, பொடியாக நறுக்கவும். புளியைக் கெட்டியாகக் கரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியதும் புளிக் கரைசல், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்க விடவும். இஞ்சி நன்றாக வதங்கி, புளிக் காய்ச்சல் பதம் வரும்போது வெல்லம் சேர்த்து இறக்கவும். ஒரு வாரம்வரை கெடாது.

மாங்கா அரைச்சு கலக்கி

மாங்கா அரைச்சு கலக்கி 

 
 
என்னென்ன தேவை? 
  
கிளிமூக்கு மாங்காய் (தோல் நீக்கி துருவியது) - 1 கப்
தேங்காய்த் துருவல் - 1 கப் 

கடுகு - 1 டீஸ்பூன் 

பச்சை மிளகாய் - 3 

மஞ்சள் பொடி - சிறிதளவு 

தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

தயிர் - 1 கப் 

உப்பு - தேவையான அளவு 


எப்படிச் செய்வது? 

 
துருவிய மாங்காய், தேங்காய்த் துருவல், உப்பு, பச்சை மிளகாய் இவற்றைக் கெட்டியாக அரைத்து தயிருடன் சேர்த்துக் கலக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டவும்.

பால் கொழுக்கட்டை

பால் கொழுக்கட்டை

 
 
என்னென்ன தேவை? 
 
பச்சரிசி மாவு - 100 கிராம்

வெல்லம் - 200 கிராம் 

தேங்காய்ப் பால் - 1 கப் 

ஏலக்காய்ப் பொடி - 1 சிட்டிகை 

நெய் - அரை டீஸ்பூன் 

முந்திரி, திராட்சை - சிறிதளவு 


எப்படிச் செய்வது? 

 
மாவின் அளவைப் போல் இரு மடங்கு தண்ணீரைக் கொதிக்க விடவும். கொதித்ததும் நெய்யும் அரிசி மாவும் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியதும் சீடை அளவு உருட்டி ஆவியில் 5 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
வெல்லத்தில் சிறிது நீர்விட்டுக் கரைத்து, பாகு தயாரித்து வடிகட்டவும். வேகவைத்த உருண்டைகளை வெல்லப் பாகில் போட்டுக் கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆறவிடவும். தேங்காய்ப் பால், ஏலப் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து பரிமாறவும்.

ஜவ்வரிசி வடாம்

ஜவ்வரிசி வடாம் 


 
என்னென்ன தேவை? 
  
ஜவ்வரிசி - 2 கப் 

பச்சை மிளாகாய் - 2 

எலுமிச்சை - பாதிப் பழம் 

உப்பு - தேவையான அளவு 


எப்படிச் செய்வது? 

 
ஜவ்வரிசியை முதல் நாள் இரவே ஊறவைத்து விடவும். 1 லிட்டர் தண்ணீரில் உப்பு போட்டு கொதித்ததும் ஊறிய ஜவ்வரிசியை சேர்த்துக் கிளறவும். ஜவ்வரிசி கண்ணாடிபோல் ஆனதும் பச்சை மிளகாயுடன் உப்பு சேர்த்து அரைத்துச் சேர்க்கவும். எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து இறக்கவும். சூடு ஓரளவு தணிந்ததும் ஜவ்வரிசி கூழைச் சிறு கரண்டியில் எடுத்து, பிளாஸ்டிக் ஷீட்டில் வட்டமாக ஊற்றவும். நன்றாகக் காய்ந்ததும் எடுத்து வைக்கவும்.

அவல் வெங்காய வடாம்

அவல் வெங்காய வடாம் 


 
என்னென்ன தேவை? 
 
அவல் - 3 கப் 

பச்சை மிளகாய் - 5 

சின்ன வெங்காயம் - கால் கிலோ 

எலுமிச்சம் பழம் - 1 

உப்பு - தேவையான அளவு 


எப்படிச் செய்வது?

 
கொதிக்கும் வெந்நீரில் அவலைப் போட்டுப் பிழிந்து எடுக்கவும். பச்சை மிளகாயை அரைத்து வடிகட்டி அந்தத் தண்ணீரை அவலில் கலக்கவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும். இதைச் சிறு உருண்டைகளாக உருட்டி, வெயிலில் காயவைத்து எடுக்கவும்.

வேப்பம்பூ மாங்காய்ப் பச்சடி

வேப்பம்பூ மாங்காய்ப் பச்சடி 

 
 
என்னென்ன தேவை?

 
வேப்பம்பூ - 1 டீஸ்பூன் 

கிளி மூக்கு மாங்காய் - 1 

வெள்ளை வெல்லம் - 100 கிராம் 

பச்சை மிளகாய் - 1 

காய்ந்த மிளகாய் - 2 

நல்லெண்ணெய், நெய் - தலா அரை டீஸ்பூன் 

கடுகு, பெருங்காயம் - சிறிதளவு 

வெந்தயம் - 1 சிட்டிகை 

உளுந்து - அரை டீஸ்பூன் 

கறிவேப்பில்லை - சிறிதளவு 

உப்பு - சிட்டிகை 


எப்படிச் செய்வது? 

 
நறுக்கிய மாங்காய்த் துண்டுகளை மூழ்கும் அளவு நீர்விட்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து காய்கள் சிதையாமல் வேகவைக்கவும். வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிட்டு, இட்லிமாவு பதத்தில் இறக்கவும். நெய், நல்லெண்ணெய்க் கலவையைச் சூடாக்கி கடுகு, பெருங்காயம், வெந்தயம், உளுந்து, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். வேப்பம்பூவைச் சேர்த்து பொரித்து, மாங்காய்க் கலவையில் சேர்க்கவும். கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும். நெய்யில் தாளிப்பதால் வேப்பம்பூவின் கசப்பு அடங்கும்.

ஜனதா குழம்பு

  படம்: எல். சீனிவாசன்


என்னென்ன தேவை? 
  
உருளை, கேரட், பீன்ஸ், அவரை, முருங்கை - ஒன்றரை கப், 

காய்ந்த மிளகாய் - 3 

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 

எலுமிச்சைச் சாறு - 1 டேபிள் ஸ்பூன் 

நெய் - 1 டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

அரைக்க 

கசகசா, சோம்பு, சீரகம், மிளகு - தலா 1 டீஸ்பூன் 

முந்திரி - 5 

தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன் 

பச்சை மிளகாய் - 2 


எப்படிச் செய்வது?

 
காய்கறிகளைச் சதுரமாக நறுக்கி குக்கரில் போட்டு வதக்கவும். காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, அரைத்த விழுதைச் சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். உப்பு சேர்க்கவும். இறக்கும்போது எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். 

நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து இந்த ஜனதா குழம்பில் சேர்க்கவும். 

சாதத்தில் ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டால் சுவையில் மயங்கும் விருந்தினர் கூடுதலாக இரண்டு நாட்கள் தங்கிவிட்டுச் செல்வார்கள்.

கத்தரிக்காய் பொடித் தூவல்

  படம்: எல். சீனிவாசன்

என்னென்ன தேவை? 
 
பிஞ்சு கத்தரிக்காய் - கால் கிலோ 

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 

பூண்டு - 15 பல், 

தக்காளி, வெங்காயம் - தலா 2 

கறிவேப்பிலை - சிறிதளவு 

மல்லித் தழை - அலங்கரிக்க 

எண்ணெய், உப்பு - தேவையான அளவு 

பொடித் தூவல் மசாலா செய்ய 

கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, வெந்தயம், தனியா - 1 டீஸ்பூன் 

காய்ந்த மிளகாய் - 4 

அன்னாசிப்பூ - 3 



எப்படிச் செய்வது? 


 
மசாலா அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுக்கவும். ஆறியதும் அரைக்கவும். 

கத்தரிக்காயைக் காம்பு நீக்கி நான்காக வெட்டி, எண்ணெயில் பொரிக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். தக்காளி, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். 

பொரித்த கத்தரி, உப்பு, மஞ்சள் தூள், மசாலா பொடியைச் சேர்த்துக் கிளறவும்.
அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து நன்றாகக் கிளறி சிறிதளவு தண்ணீர் தெளித்து, மூடிவைத்து 10 நிமிடம் வேகவிடவும். நடுவே ஓரிரு முறை கிளறவும். அப்போதுதான் மசாலா நன்றாகக் கத்தரிக்காயில் இறங்கி சுவை கூடும். நறுக்கிய மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

கொண்டைக்கடலை சாதம்

 
 படம்: எல். சீனிவாசன்

என்னென்ன தேவை? 
  
பாசுமதி அரிசி - 1 கப் 

கொண்டைக்கடலை - அரை கப் 

குடமிளகாய் - 1 கப் (பொடியாக அரிந்தது) 

இஞ்சி - பூண்டு விழுது, சாட் மசாலா, நெய் - தலா 1 டீஸ்பூன் 

பிரியாணி இலை - 1 

தேங்காய்ப் பால் - 2 கப் 

உலர்ந்த வெந்தய இலை - 1 டேபிள் ஸ்பூன் 

தக்காளி - 4 

பட்டை, கிராம்பு - 1 அங்குலத் துண்டு 

வெங்காயம் - 3 

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு 

மசாலா அரைக்க 

சீரகம் - 1 டீஸ்பூன் 

பூண்டு - 8 பல் 

காய்ந்த மிளகாய் - 6 

சின்ன வெங்காயம் - 8 


எப்படிச் செய்வது? 

 
கொண்டைக்கடலையை 10 மணி நேரம் ஊறவைத்து உப்புப் போட்டு வேகவைத்து எடுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து, ஆறவைத்து அரைக்கவும். 

வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு சேர்த்துத் தாளிக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிரியாணி இலை, குடமிளகாய், அரைத்துவைத்திருக்கும் மசாலா, உப்பு சேர்த்து வதக்கி வைக்கவும். 

அரிசியைத் தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து, நீரை வடிக்கவும். பிறகு ஈரம் போகும் வரை நெய்யில் அரிசியை வறுக்கவும். வறுத்த அரிசியில் தேங்காய்ப் பால் விட்டு, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
வேகவைத்த கொண்டைக்கடலை, வதக்கிய குடமிளகாய் மசாலா, வெந்தய இலை, சாட் மசாலா சேர்த்து லேசாகக் கொதித்ததும், குக்கரை மூடவும். 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். சில நிமிடம் கழித்து குக்கரைத் திறந்து சுடச் சுடப் பரிமாறவும்.

மலாய் பேடா

  படம்: எல். சீனிவாசன்

என்னென்ன தேவை? 
 
பால் - 1 லிட்டர் 

சர்க்கரை - கால் கப் 

மைதா மாவு - 3 டேபிள் ஸ்பூன் 

துருவிய பாதாம், பிஸ்தா பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் 

ஏலக்காய்ப் பொடி - 1 சிட்டிகை 

குங்குமப் பூ - 1 டீஸ்பூன்

நெய் - சிறிதளவு 


ப்படிச் செய்வது? 

பாலைச் சுண்டக் காய்ச்சி, கோவா ஆக்கிக் கொள்ளவும். சர்க்கரையில் சிறிது நீர் விட்டுப் பாகு காய்ச்சி, மைதா சேர்த்துக் கிளறவும். வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை ஊறவைத்து அதையும் இதில் ஊற்றிக் கிளறவும். கோவாவைச் சேர்த்து சிறிது நெய் விட்டுக் கிளறினால் மலாய் பேடா தயார்.
துருவிய பாதாம், பிஸ்தா சேர்க்கவும். பெரிய மூடியில் வட்டமாக அமுக்கி எடுத்தால் வட்டமாக வந்துவிடும். இதைத் தயாரிக்க, சிறிது நேரமானாலும் சாப்பிடும்போது அந்த அலுப்பு மறைந்துவிடும்.

ஸ்டஃப்டு பூரி

  படம்: எல். சீனிவாசன்

என்னென்ன தேவை? 
  
கோதுமை மாவு - 2 கப் 

உருளைக் கிழங்கு - 1 

தூதுவளை இலை - 1 கப் 

கெட்டித் தயிர் - 1 டேபிள் ஸ்பூன் 

சீரகத் தூள் - 1 டீஸ்பூன் 

எண்ணெய், உப்பு - தேவையான அளவு 

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் 

சர்க்கரை - அரை டீஸ்பூன் 


எப்படிச் செய்வது? 

 
உருளைக் கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசிக்கவும். தூதுவளை இலைகளைச் சுத்தம் செய்து அலசவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தூதுவளை இலைகளைச் சேர்த்து லேசாக வதக்கவும்.
கோதுமை மாவுடன் உப்பு, சீரகத் தூள், மிளகாய்த் தூள், சர்க்கரை, கெட்டித் தயிர், மசித்த உருளைக் கிழங்கு, வதக்கிய கீரை ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நீர் தெளித்து மிருதுவாகப் பிசையவும். பிசைந்த மாவைச் சிறிய பூரியாக இட்டு, சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
வெந்தயக் கீரை, பசலைக் கீரை, முளைக் கீரை ஆகியவற்றை வைத்தும் இந்தப் பூரியைச் செய்யலாம்.

மிளகாய் பஜ்ஜி

  படம்: எல். சீனிவாசன்

என்னென்ன தேவை? 
 
பஜ்ஜி மிளகாய் - 4 

மைதா - அரை கப் 

ரவை - 2 டேபிள் ஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 

உருளைக் கிழங்கு - 1 

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் 

வேர்கடலைத் தூள் - 1 டேபிள் ஸ்பூன் 

புளிக் கரைசல் - சிறிதளவு 

வெங்காயம் - 1 

எண்ணெய், உப்பு - தேவையான அளவு 


எப்படிச் செய்வது? 
 
மைதா, ரவை இவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், மசித்த உருளை, உப்பு, மஞ்சள் தூள், மிளகுத் தூள், வேர்கடலைத் தூள் சேர்த்துப் புரட்டவும். புளிக் கரைசலைத் தெளித்துக் கிளறி, இறக்கி வைக்கவும்.
பஜ்ஜி மிளகாயை நடுவில் கீறி, விதையை நீக்கிவிட்டு, வதக்கி வைத்திருக்கும் மசாலாவை உள்ளே வைத்து மூடவும். பிசைந்து வைத்திருக்கும் மாவைச் சப்பாத்தியாக இட்டு நீளமாக வெட்டவும். மிளகாயின் வெளிப்புறம் சிறிது எண்ணெய் தடவி, வெட்டி வைத்திருக்கும் சப்பாத்தியைச் சுற்றவும். இதைச் சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

வெந்தயக் கீரைத் தொக்கு

வெந்தயக் கீரைத் தொக்கு 

 
 
என்னென்ன தேவை? 
 
வெந்தயக் கீரை 4 கட்டு 

சிறிய வெங்காயம் 1 கப் (நறுக்கியது) தக்காளி 3 

பூண்டு 1 

இஞ்சி 1 துண்டு 

மிளகு 2 டீஸ்பூன் 

நல்லெண்ணெய் 2 டீஸ்பூன் 

கடுகு, உளுந்து தேவையான அளவு 

உப்பு தேவையான அளவு 


எப்படிச் செய்வது? 
 
வெந்தயக் கீரையைச் சுத்தம் செய்து அலசி, அரிந்து வைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். வெறும் வாணலியில் மிளகை வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு, உளுந்து தாளித்து, நறுக்கிவைத்துள்ள வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் இஞ்சி, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பொடித்து வைத்துள்ள மிளகைத் தூவி, கிளறவும். உப்பைச் சேர்த்து, கடைசியாக வெந்தயக் கீரையைச் சேர்த்துச் சுருள வதக்கி இறக்கவும். வெந்தயக் கீரையை விரும்பாதவர்கள்கூட இந்தத் தொக்கை விரும்பிச் சாப்பிடுவார்கள். சப்பாத்தியுடன் சேர்த்துச் சாப்பிட அருமையாக இருக்கும்
பெண்களுக்கு ஏற்ற உணவு. பெண்களின் மாதவிடாயைச் சீராக்கும். குளிர்ச்சியானது. தலைமுடி வளரத் துணைபுரியும்.

வேர்க்கடலைக் கூழ்

வேர்க்கடலைக் கூழ் 


 
என்னென்ன தேவை? 

 
வேர்க்கடலை, வெல்லம் தலா 1 கப் 

வாழைப்பழம் - 2 


எப்படிச் செய்வது? 
 
வேர்க்கடலையை ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த கடலையை நன்கு கழுவி அதனுடன் வெல்லம், வாழைப்பழம் சேர்த்து மூன்றையும் தண்ணீர் விடாமல் நன்கு அரைத்து எடுத்தால் நிலக்கடலை கூழ் தயார். இதை ஃபிரிட்ஜில் வைத்துச் சாப்பிட்டால் ஐஸ்கிரீம் போல் இருக்கும். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். சத்து நிறைந்த சுவையான உணவான இந்தக் கூழைக் காலை நேர உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம். உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

கீரை தயிர்க் கூட்டு

 


கீரை தயிர்க் கூட்டு
 
என்னென்ன தேவை?
முளைக்கீரை 1 கட்டு
தயிர் அரை கப்
தேங்காய்த் துருவல் சிறிதளவு
பச்சை மிளகாய் 2
மிளகு அரை டீஸ்பூன்
பெருங்காயம் சிறிதளவு
நல்லெண்ணெய் 1 டீஸ்பூன்
கடுகு, உளுந்து தேவையான அளவு
உப்பு தேவையான அளவு

எப்படிச் செய்வது? 
 
கீரையைச் சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் இவற்றைச் சேர்த்து வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். கீரையைச் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அரைத்த கலவை, பெருங்காயம் சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்கவும். ஆறியதும் தயிர், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். கடைசியாகக் கடுகு தாளித்துக் கொட்டவும்.

Saturday, 9 May 2015

இளநீர்ப் பாயசம்

இளநீர்ப் பாயசம் 

 

 

இளநீர்ப் பாயசம்
 



என்னென்ன தேவை? 

 
இளநீர் 2 (வழுக்கை பதம்) 

பனங்கற்கண்டு 200 கிராம் 

வறுத்த சேமியா 1 கைப்பிடி 

நெய், ஏலக்காய், முந்திரி, திராட்சை சிறிதளவு 




எப்படிச் செய்வது? 

 
இளநீரையும் சதைப் பகுதியையும் மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். பனங் கற்கண்டைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். 

ஏலக்காய், முந்திரி, திராட்சையை நெய்யில் வறுக்கவும். பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும். 


அதில் சேமியாவைச் சேர்க்கவும். வறுத்த ஏலக்காய், முந்திரி, திராட்சையை அதில் சேர்த்துக் கொதிக்கவிடவும். பின்னர் அரைத்த இளநீர், பனங் கற்கண்டு இரண்டையும் சேர்த்து நன்கு கிளறி, பாயசம் பதத்தில் இறக்கவும். 


விரும்பினால் காய்ச்சி ஆறிய பாலையும் சேர்க்கலாம். இளநீர் சதைப் பகுதி, பனங் கற்கண்டு, ஏலக்காய் இந்த மூன்றையும் மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி, ஃபிரிட்ஜில் வைத்தும் அருந்தலாம்.